எனது ஜெபங்கள்-2
அதிகாலை வேளையில்:
"நன்றி ஆண்டவரே இந்த நாளை தந்ததற்காய் . இரவு முழுதும் நல்ல நித்திரை வரப்பண்ணி இந்த நல்ல நாளிலும் அதிகாலை வேளையை தந்து என்னை துயில் எழுப்பிவிட்டு என்னை உமது சமூகத்தில் அமரச் செய்தீரே ஸ்தோத்திரம் . இந்த நாளிலேதானே 'காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன் , கர்த்தாவே காலையிலே என் சத்தத்தை கேட்டருளுவீர் ' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், 'நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், 'நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன் ' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'அதிகாலையிலே தேவன் சகாயம் பண்ணுவார்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், 'அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்கு காண்பியும்' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், அதுபோலவே காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்குகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்.
'அதிகாலமே உம்மை தேடுகிறேன்' என்கிற வார்த்தையின்படியும், 'கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் தேடுங்கள்' என்கிற வார்த்தையின்படியும் தேடி உம்மை கண்டடைந்ததற்காய் ஸ்தோத்திரம். இந்த நாளிலுந்தானே நான் செய்யப்போகின்ற காரியங்கள் யாவையும் நன்மையாக வாய்க்கபண்ணும், அக்காரியங்கள் மூலம் உமது நாமம் மகிமைப்படவும், உமது மகிமை விளங்கப்பப்பண்ணவும் பண்ணும் ஆமென்".
இரவு வேளையில்:
"நன்றி ஆண்டவரே, இந்த நல்ல இரவு வேளையை தந்ததற்காய். இந்த நாளிலுந்தானே நான் செய்த காரியங்கள் யாவும் நன்மையாக வாய்க்கப்பண்ணி, உமது நாமம் மகிமைப்படவும், உமது மகிமையை விளங்கவும் பண்ணினீரே ஸ்தோத்திரம். 'கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்' என்கிற வார்த்தையின்படியே எனக்கும் நித்திரையை வரப்பண்ணும், நான் தூங்கும்போது கெட்ட சொப்பனங்களாலோ, விஷப்பூச்சிகளாலோ அல்லது கள்ளர்களாலோ ஏதும் நேராமல் உமது தூதர்களை என்னை சுற்றிலும் பாளயமிறக்கி காத்துக்கொள்ளும். 'இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்' என்னை விலக்கி காத்துக்கொள்ளும்.
'இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னை சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருப்பதற்காய்' உமக்கு நன்றி. 'என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்' என்கிற வசனத்தின்படி என்னையும் உம்மை தியானிக்கப் பண்ணும். 'நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய், நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்' என்கிற வார்த்தையின்படி நல்ல நித்திரையை வரப்பண்ணி மீண்டுமாய் ஒரு புதிய நாளிலே உமது புதிய கிருபைகளை பெற்றுக்கொள்ள அதிகாலையிலே என்னை துயில் எழுப்பிவிடும் ஆமென்."
கருத்துகள்
கருத்துரையிடுக