மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் காட்டிகொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைய சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்படப் போகும் முன்பதாகவே தனது சீஷர் சீமோன் பேதுருவிடம் "இன்றிரவு சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்பாக நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று கூறியிருந்தார். அதேப்போலவே இயேசுவை பாடுகளுக்கு உட்படுத்தப்பட கட்டளை பெற்றுக்கொண்டு, அவரை அழைத்துக் கொண்டுபோகும் முன்னமே, சேவல் கூவுவதற்கு முன்பாகவே பேதுருவும் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ மூன்றுமுறை மறுதலித்தும்விட்டார். 

மேற்குறிப்பிட்ட சம்பவம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சம்பவமே, ஆனாலும் இங்கு நான் அதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து யோசித்தபோது எனக்கு உதித்த எண்ணத்தை பகிருகிறேன், இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து மட்டுமே. பேதுரு மூன்றுமுறை மறுதலித்த விதத்தை சற்று ஆராய்ந்தால், முதல்முறை "அவரை எனக்கு தெரியாது / நான் அவரை அறியேன்" என்றார். இரண்டாவது முறை, "அவரோடு இருந்தவன் நான் அல்ல" என்றார். மூன்றாவது முறை, இன்னும் அதிகமாய் ஒருமையில் "அவனை எனக்கு தெரியாது" என்று சத்தியம் செய்யவும் சபிக்கவும்கூட செய்தார். இப்படி நடக்கவும் சேவல் கூவவும் சரியாக இருந்தது.


அதாவது இங்கு, ஒவ்வொருமுறை மறுதலிக்கும் போதும் மறுதலிப்பின் அளவானது அதிகமாகிக் கொண்டுதான் போனது, முதல்முறை அவரை தெரியாது என்று கூறினார், பின்னர் அவரோடு இருந்தவன் தானல்ல என்று சாதித்து தப்பிக்கப் பார்த்தார், இறுதியாக அவன் யாரென்றே எனக்கு தெரியாது எனக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒருமையில் கூறி சத்தியம் செய்யுமளவுக்கு போய்விட்டார். பின்னர் நிதானமாக யோசித்து ஆராய்ந்து மிகுந்த வருத்தம் அடைந்து மனங்கசந்து அழுது கர்த்தரிடம் மன்னிப்புக்கேட்டு தன்னை முழுவதுமாக ஒப்புவித்து ஒப்புரவாகிவிட்டார்.

பின்னர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு ஒருநாள் தமது சீஷர்களுக்கு திபேரியா கடற்கரையிலே தம்மை தரிசனமாக வெளிப்படுத்தினார், அப்போது பேதுருவை நோக்கி "யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்றார். அதற்கு பேதுரு, "ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசு பிரதியுத்திரமாக "என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக" என்றார். மீண்டும் இயேசு பேதுருவிடம், "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்றார். அதற்கு பேதுரு, "ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசு மீண்டும் பிரதியுத்திரமாக "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்றார்.

மீண்டும் இயேசு "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?" என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு, "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றார். இயேசுவும், "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்றார். இங்கு நமக்கு கேள்விகள் எழலாம் ஏன் இயேசு மூன்றுமுறை பேதுருவிடம் ஒரே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டாரென. காரணம் பேதுரு மூன்றுமுறை தன்னை மறுதலித்ததை நினைவுகூர்ந்து அவரை தாம் மன்னிக்கும் விதமாக அல்லது மன்னித்ததன் விளைவாக இப்படி கேட்டிருக்கிறார் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.


இது முற்றிலும் எனக்கு தோன்றிய எண்ணம்தான் ஆனாலும், இயேசு ஒவ்வொருமுறை கேட்ட கேள்வியின் தன்மையானது அதிகரித்துக்கொண்டே தான் போயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். எப்படி பேதுருவின் மறுதலிப்பின் அளவு கூடிக்கொண்டே போனதுபோல அத்தவறை மன்னிக்கும் விதமாக இவரது கேள்விகளுக்கும் வித்தியாசம் கூடிக்கொண்டே போயிருக்கிறது. தமிழ் வேதாகமத்தில் பெரிதாக வித்தியாசத்தை உணரமுடியாது ஆனால் எபிரேயு கிரேக்க மொழிகளின் அர்த்தத்தில் புரிந்து படித்தால் உணரலாம், ஆயினும் தமிழிலேயே இதை சற்று வேறுபடுத்தி காட்டத்தான் இப்பதிவு.

அன்பு, காதல், சிநேகம், பிரியம் & நேசம் இவைகள் எல்லாமே பொதுவாக பார்த்தால் ஒரே அர்த்தம் பொதிந்த வார்த்தைகளாய்த்தான் தெரியும், ஆனாலும் இவற்றுக்குள்ளும் சிறுசிறு அர்த்த வேறுபாடுகள் காணப்படுகிறது. அன்பு & பிரியம் இவ்விரு வார்த்தைகளையும் முதலில் எடுத்துக்கொள்ளலாம் இவைகள் இரண்டுமே உயர்திணைக்கும் பொருந்தும் அஃறிணைக்கும் பொருந்தும் உதாரணமாக நான் ஒருவர்மீது அன்பாயிருக்கிறேன் என்றும் சொல்லலாம், நான் என்வீட்டு நாய்க்குட்டி பூனைக்குட்டியின் மீதும் அன்பாயிருக்கிறேன் என்றும் சொல்லலாம், இன்னும் நான் எனது இருசக்கர நாற்சக்கர வாகனம் மீது, எனக்கு மிகவும் பிடித்த பொம்மை மீது பிரியம் வைத்திருக்கிறேன் என்றும்கூட சொல்லலாம்.

இரண்டாவது சிநேகம், இது உயர்திணைக்கு மட்டுமே பொருத்தும். இதனை பார்க்கும்போது ஒரு நட்புறவு என்கிற பதம் வருகிறது அதாவது ஒரு உறவுமுறை, ஒரு மதிப்புவாய்ந்த என்பதுபோன்ற பதத்தில் பயன்படுத்தப் படுகிறது. உதாரணமாக நான் இவரை சிநேகிக்கிறேன் என்று சொல்லலாம், அல்லது இவரில் நான் சிநேகமாய் இருக்கிறேன் எனலாம். அடுத்து காதல், இவ்வார்த்தையைப் பற்றி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை, வேண்டுமானால் ஒன்றேயொன்று சொல்லலாம், மேற்சொன்ன எல்லா வார்த்தைகளில் 'கள்ள' எனும் வார்த்தை மிகச்சரியாக முன்னொட்டாகப் பொருந்திப்போகும் ஒரே வார்த்தையாக இவ்வார்த்தை உள்ளது.

கடைசியாக நேசம், இது கண்டிப்பாக ஒரு உயர்திணை வார்த்தையாகும். இதன் உள்ளர்த்தம் முழுமையாக ஒருவரை நம்புவது, எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவர்தானென சரணாகதி அடைவது. அதற்காக கண்மூடித்தனமான நம்பிக்கை என்று அர்த்தம்கொள்ள கூடாது, அப்படியே கண்மூடித்தனமாக நம்பினாலும் வைத்திருக்கும் நேசத்தில் சிறிதும் மாறாமல் இருப்பது, அவரால் மரணமே வந்தாலும் அல்லது அவர் நிமித்தம் மரணம் வந்தாலும் தாம் கொண்ட நேசத்தால் நேசித்த நேசத்தின் நிமித்தம் அதை மனதார ஏற்றுக்கொள்ளும் ஒரு உன்னத மனநிலையாகும். இயேசுவும் முதலில் அன்பு/பிரியம் இரண்டாவது சிநேகம் மூன்றாவது நேசம் என்கிற அர்த்தத்தில் தான் மூன்றுமுறை கேள்விகளை கேட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

மறுதலிப்புக்கு தக்கவாறு மன்னிப்பின் மறுவாழ்வின் அளவும் வார்த்தை பிரயோகமும்கூட கூடிக்கொண்டே போகிறதை காணலாம். பேதுருவும் அதை மெல்ல மெல்ல உணர்ந்தவராய் இருந்திருப்பாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நாமும் அதுபோலவே கர்த்தரை ஏதேனும் ஒருசில சமயத்தில் மறுதலித்திருந்தால் அவரிடம் மனதார மன்னிப்புகேட்டு நம்மை முற்றிலும் ஒப்படைத்து ஒப்புரவாகிவிட வேண்டும். ஏனெனில் நாம் அவர்மீது வைத்த நேசத்தைவிட அவர் நம்மீது வைத்திருக்கிற நேசம் அளவிட முடியாதது என்பது மாறாத ஒரு உண்மை. கடைசியாக அவ்விரு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா இல்லையா என்பதை படிக்கின்ற நீங்களும் ஆராய்ந்தறிந்து எனக்கும் சொல்லுங்கள்.

ஒன்றை இங்கு படிக்கின்ற உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன், இயேசு பேதுருவை குற்றப்படுத்த அல்லது குத்திக்காட்ட வேண்டுமென்கிற நோக்கத்தில் கேட்கவில்லை மேலும் இயேசுவுக்கும் பேதுரு தன்னை நேசிப்பது நன்றாகத் தெரியும், இருந்தாலும் ஒருவேளை பின்னர் பேதுருமீது ஒரு களங்கம் என் நிமித்தம் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்திருக்கிறார் என்பதை உணரலாம், ஆகவேதான் முதல்முறையே இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றே கேட்டார். மேலும் என் ஆட்டுக்குட்டிகளை (புது விசுவாசிகள்) மேய்ப்பாயாக என்றார். பின்னர் பேதுருவின் உறுதியையும் நேசத்தினையும் உறுதிப்படுத்தியபின், என் ஆடுகளை (சீஷர்களை வழிநடத்த) மேய்ப்பாயாக என்றார்.

நன்கு பழகிய ஒருவரை மறுதலிப்பது என்பது மிகப்பெரிய தவறுதான் ஆனாலும் மன்னிப்புகேட்டு அதை பெற்றபின் வருகின்ற நேசம் இன்னும் அதிகமாய் இருக்குமல்லவா, ஏனென்றால் 'எவனுக்கு அதிகம் மன்னிக்கப்பட்டதோ, அவனே அதிகம் அன்பாயிருப்பான்' என்று பேதுருவே ஒருமுறை தன்னிடம் இயேசு கேட்டபொழுது பதிலளித்திருந்தார். அப்படியானால் பேதுருவின் நேசம்தான் பெரிதென கொள்ளலாமா, உன்பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று நீ கண்டால், முதலில் ஒப்புரவாகிவிட்டு வந்து காணிக்கை செலுத்து என்பதை இயேசு நினைவுகூர்ந்து, தான் பிதாவினிடத்தில் போகும்முன் தம்பேரில் பேதுருவுக்கு யாதொரு குறையும் பிறரால் வந்துவிட கூடாதென களங்கத்தை போக்க இப்படி கேட்டிருக்கலாம் தானே, அப்போது இயேசுவின் நேசம்தான் மிகப்பெரிதென தெளிவாக அறியமுடிகிறதல்லவா.!?!

நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)