அற்பமும் அற்புதமும்

'உங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் இடங்கொடுக்க மாட்டேன்' என்று, கர்த்தர் நமக்கு வாக்கு பண்ணியிருப்பதை விசுவாசத்தோடு உறுதியாகப் பற்றிக்கொண்டு அறிக்கையிட்டு ஜெபிக்கக்கூட திராணியாற்றுப்போன ஒரு நிலைமையில் பலவீனப்பட்டு எல்லாராலும் அற்பமாய் பார்க்கப்படுகிறதாய் நாம் என்றைக்கேனும் வருத்தப்பட்டு உணர்ந்திருப்போம் என்றால், அப்படிப்பட்ட நமக்காகத்தான் இப்பதிவு. 

இங்கு நான், நாம் நமக்கு என்று சொல்லக்காரணம், நானும் அவ்வாறு என்னையும் நினைத்திருந்த ஒருவேளையில் வசனத்தின் மூலமாக அதனை ஆராய்ந்ததின் மூலமாக என்னுடைய நினைப்பு தவறு என்று என்னை அறியவைத்து, கர்த்தர் தாமே சோதிக்கப் படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார் என்பதை எனக்கு புரியவும் வைத்தார், எப்படியென்று கீழே சற்று விரிவாகப் பார்ப்போம்.

"லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்" - ஆதியாகமம் 29: 31

மேற்குறிப்பிட்ட வசனம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்ததுதான், யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஆசைப்பட்டு  7 வருஷம் தன் தாய்மாமனாகிய லாபானிடம் வேலைசெய்து, முடிவில் அவனால் ஏமாற்றப்பட்டு அவளது அக்காவான கூச்சப்பார்வை உடைய லேயாளை திருமணம் செய்துகொள்ளும்படி ஆயிற்று. பிறகு மீண்டும் 7 வருஷம்  லாபானிடம் வேலைசெய்து  ராகேலை திருமணம் செய்துகொண்டான். 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, யாக்கோபு 14 வருஷமும் உழைத்தது ராகேலுக்காக. லாபானும் தன் மூத்தமகளுக்கு எங்கே திருமணம் ஆகாமல் போய்விடுமோ என்ற எண்ணத்திலே பயத்திலே யாக்கோபை ஏமாற்றி அவனுக்கு திருமணஞ்செய்து கொடுத்துவிட்டான். இதில் லாபான் தன் மூத்தமகளாகிய லேயாளின் விருப்பத்தினை அறியவுமில்லை கேட்கவும் இல்லை, ஆனால் அவனே முன்னர் தன் சகோதரியாகிய ரெபேக்காளை ஈசாக்குக்கு திருமணம் செய்துவைக்கும்போது அவளது விருப்பத்தினை கேட்டான் என்றும் வாசிக்கிறோம்.

இப்படியிருக்க லேயாள் தனது தகப்பனால், கணவனால் சகோதரியால் என எல்லாராலும் அற்பமாய் எண்ணப்பட்டு வந்தாள், ஆயினும் அவள் என்னவொரு மனவேதனை பட்டிருப்பாள் என்பதை நாமும் கொஞ்சமேனும் உணரமுடியுமல்லவா. ஆகிலும் இவள் எனக்கு இப்படியொரு வாழ்வினை ஏன் தந்தீர் என்று தேவனை தூஷிக்கவுமில்லை இந்தபாடு இந்த அவமானம் இந்த நிந்தை என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று கர்த்தரிடம் மன்றாடவும் இல்லை, யாக்கோப்பினை விட்டுப்போகவும் இல்லை நாமும் அப்படி படிக்கவில்லை.



அவள் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டாள், இருவரும் ஏமாற்றப்பட்டு திருமணம் செய்துகொண்டுவிட்டோம் இருந்தாலும், இது தேவசித்தம் என்று ஏற்றுக்கொண்டாள், எனவே கர்த்தர் அவளுக்கு முதலில் ஒரு குழந்தையை தந்தார். ஆகார் தன் நாச்சியாராகிய சாராளை அற்பமாய் எண்ணியதுபோலவும், பெனின்னாள் தன் சக்களத்தியாகிய அன்னாளை அற்பமாக எண்ணியதுபோலவும் லேயாள் தனக்கும் குழந்தை பிறக்கும் முன்னவும் பிறந்த பின்னரும்கூட ஒருபொழுதும் ராகேலை அற்பமாய் எண்ணவில்லை. இதுவே கர்த்தரின் பார்வையில் லேயாளை உயர்த்திக் காட்டியிருக்கும்.

எனவேதான் கர்த்தர் அவளுக்கு பூரணமாக 7 குழந்தைகள் பிறக்கும்படி செய்தார், அதிலும் 4 பிள்ளைகளுக்கு  பிறகும் பிள்ளைப்பேறு நின்றுபோனபின்பும் கூட  மேலும் 3 பிள்ளைகளைப்பெற அநுக்கிரகம் பண்ணினார். அதிலும் அற்புதமாக லேயாள் மூலம் பிறந்த யூதா கோத்திரத்தத்தைத் தான் இயேசு கிறிஸ்துவும் தாம் பிறக்க தெரிந்தெடுத்தார். இதன்மூலம் கர்த்தர் லேயாளையும் முன்குறித்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இங்கு நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது, நாமும் எல்லாராலும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் அற்பமாய் எண்ணப் படுவோமேயானால் அதனைக்குறித்து நாம் வருத்தப்பட தேவையில்லை, நாம் அற்பமாய் எண்ணப்படுவதை கர்த்தர் அறிந்திருக்கிறார். லேயாள் எப்படி இதற்காக மன்றாடாமலே கர்த்தரிடம் முழுப்பலனை பெற்றுக் கொண்டாளோ, நாம் அதற்காக ஜெபிக்கும்போது நமக்கும் இன்னும் அதிகமாய் ஏற்றதை செய்வார் என்பது அதிகநிச்சயம் அல்லவா. நம்மையும் அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக முன்குறித்து வைத்திருக்கிறார் என்பதும் விளங்குகிறதல்லவா.

வீடு கட்டுகிறவர்களாலேயே ஆகாதென்று அற்பமாய் தள்ளப்பட்ட கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று என்பது நாம் நன்கு அறிந்ததுதானே, பிறகு கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதுபோல நாமும் தைரியமாக கூறுவோம். அற்பமாக எண்ணப்படும் நம்மை அவர் அற்புதமாக மாற்றிக்காட்டுவார்.

ஆமென்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)