உலக இரத்ததான தினம் (ஜூன் 14)

இன்று ஜூன் 14-ஆம் தேதி, இந்நாளை 'உலக இரத்ததான தினமாக' கொண்டாடுவர். இரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லாண்ட்ஸ்டைனரது (Karl Landsteiner) பிறந்தநாள் இன்று, ஆகவே அவரையும் அவரது கண்டுபிடிப்பையும் நினைவுகூர இந்நாளானது கொண்டாடப்படுகிறது. இத்தகவலுக்கும் இப்பதிவிற்கும் ஏன் இந்த வலைப்பூவிற்குமே துளியும் சம்பந்தமே இல்லையே, பின்னர் ஏன் நானிங்கே அதனை பதிவிடவேண்டும், நீங்களும் ஏன் படிக்கவேண்டும்?

சொல்கிறேன், துளியும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட முடியாது,  ஏனென்றால் நான் இங்கு சொல்லப்போவதே அந்த துளிகளைப் பற்றித்தான். ஆம், நமக்காக சிந்தப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத் துளிகளைப் பற்றித்தான். ஏனென்றால் இந்த மொத்த உலகத்திற்கே முதன்முதலில்  இரத்ததானத்தை கற்றுத் தந்தவர் இவர்தானே. 'ஒருவரது இரத்தமானது, மற்றவருக்கும் பயன்படும்' என்கிற அடிப்படையே இவரிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம்தானே.


அப்படிப்பட்டவரை நாம் இந்நாளிலும்கூட  நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும், உலகமானது கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, அவரது இரத்தத்தாலே மீட்கப்பட்ட நாமாவது கொண்டாட வேண்டும், குறைந்தபட்சம் விருப்பமுள்ள & தகுதியுள்ள நாமும் இரத்ததானம் அளித்து, ஆண்டவரின் அன்பினை பறைசாற்ற வேண்டும், அல்லது அவரது தியாகத்தினை, அன்பினை, தயவாய் நம்மேல் வைத்த கிருபையினை நினைத்து இந்நாளிலும்கூட அதிகமாய்த் துதித்து ஸ்தோத்தரிக்க வேண்டும்.

ஏனென்றால், "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது". ஆகவேதான் "மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்". ஜீவனை மாத்திரமல்ல, அவரது இரத்தத்தையும் முழுவதுமாக கொடுத்தார். மேலும், "ஸ்தோத்திரம்பண்ணி, நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது என்றார்". நமக்கு இதனை நினைவுகூர்ந்து பானம் பண்ணவும் கட்டளை இட்டார்.

அவருடையது, குற்றமில்லாத இரத்தமாகும், அதனை அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸும் ஒப்புக் கொண்டிருக்கிறான். கர்த்தர் அருவருத்து வெறுக்கிற ஏழு காரியங்களில் ஒன்று, 'குற்றமற்றவர்களின் இரத்தம் சிந்துதல்' என்று நீதிமொழிகளில் அவரே சொல்லியிருக்க, கர்த்தரே தம்முடைய இரத்ததை இப்படி எதற்காக நமக்காகச் சிந்தவேண்டும் என்று நாம் சிந்தித்திருப்போமா, நம்மில் சிலர் யோசித்திருப்போம், அல்லது சிலவேளை யோசித்திருப்போம், ஆனால் அதனை உணர்த்தவர்களாய் அவரது நோக்கத்தை அறிந்தவர்களாய் நாம் என்றைக்கேனும் அதிகமாய் நினைவுகூர்ந்திருப்போமா, இல்லை என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கும்.

எனவே, "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" என்று பேதுரு சொல்லியிருப்பதுபோல, மீட்கப்பட்ட நாம் இத்தினத்தில், குறைந்தபட்சம் கர்த்தருக்கென்று, அவரது சிந்தின இரத்தத்திற்கு விலைக்கிரையமாக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணவேண்டும், அவரது அன்பினை நற்கிரியைகள் மூலம் அறிவிக்கவேண்டும். அதனாலேயே நானும் இப்பதிவை இத்தினத்தில் பதிவிட்டு, இதனை படிக்கின்ற ஆத்துமாக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டி வேண்டுதலோடு பதிவிடுகிறேன்.
ஆமென்.!

மேலும் இரத்ததானத்தைப் பற்றியும், நமது ஆண்டவரின் அன்பினையும் சொல்லும் ஒரு பாடலையும் கீழே பதிவேற்றியுள்ளேன். 👇



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்