எனது ஜெபங்கள்-1

"நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு முறைமையை மத்தேயு 6-ஆம் அதிகாரத்தில் கற்றுத் தந்திருக்கிறார், இருப்பினும் நாம் அனைவருமே நமது ஜெபங்களுக்குப் பிறகு அனைவரும் சேர்ந்து சொல்லக்கூடிய ஒரு பொதுவான இறுதி அறிக்கையாகத்தான் அந்த 'பரமண்டல' ஜெபத்தை ஏறெடுத்து வருகிறோம். நான் இங்கு நாம் அவ்வாறு செய்வதைப்பற்றி குறைசொல்லவில்லை அது தவறா இல்லையா என்பதை பற்றிய ஆராச்சியாகவும் இப்பதிவினை பதிவிடவில்லை. 

கர்த்தரே "என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்" என்றும் நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். எனவே இப்பதிவில் நானும் எந்தமாதிரியான காரியங்களுக்கு எவ்வாறெல்லாம் ஜெபிப்பேன் என்பதை பதிவிடுகிறேன். படிக்கின்ற உங்களுக்கு அதில் ஏதேனும் மாற்றுக்கருத்து அதாவது, இவ்வாறெல்லாம் ஜெபிப்பது கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குவதற்கு ஒப்பாகும் என்பதுபோல எண்ணம் வருவதுபோலான ஜெபத்தை நான் தவறாக  ஏறெடுக்கிறேனா என்பதை நீங்கள் தெரியப்படுத்துங்கள், மேலும் சரியாக இருப்பின் நீங்களும் அவ்வாறே ஜெபிக்க பழகுங்கள்.


பிரசங்கங்களுக்கு முன்:

"சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன், ஏனெனில் கேட்கிற நான் உமது பிள்ளை, பேசுகிற நீர் உண்மையுள்ள தேவன் ஆகவே பேசுகிற தாசரும் உமது அடியாராகதான் இருந்தாகவேண்டும், அப்படியிராவிட்டால் அது என் மனதில் பதியாமல் செவியில் சேராமல் நீர் அதனை குலைச்சலாக்கிப் போடும். பேசுகிறவர் நீராயின் என்னோடு பேசும்  ஆமென் " என்று ஜெபிப்பேன். 

இந்தமாதிரியான  ஜெபத்தை எப்பேற்பட்ட பெரிய ஊழியக்காரர் பிரசங்கம் பண்ணவந்தாலுஞ்சரி, அல்லது YouTube, Facebook, Radio, TV இப்படி நேரடியாக இல்லாமல் வலைதள வாயிலாக எதிலாவது கேட்க நேர்ந்தாலுஞ்சரி எப்பொழுதும் கண்டிப்பாக ஒவ்வொருமுறையும் ஜெபிப்பேன். ஏனெனில் சிலசமயங்களில் நம்மையும்மீறி கள்ளப் போதகத்தை நாம் கட்டாயமாக கேட்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாமல்லவா அதற்காகத்தான்.


பாவமன்னிப்பின் போது:

"கர்த்தாவே, எனக்காக எனது பாவங்களுக்காக நீர் மரணித்தீர். அதுபோல நாங்களும் எங்கள் ஒவ்வொருவரையும் ஒருவருக்கொருவர் மன்னித்து நேசித்து அன்பாயிருக்க கட்டளையும் இட்டிருக்கிறீர். அதுபிரகாரமாகவே நானும் தெரிந்தோ தெரியாமலோ யாருக்கேனும் தீங்கிழைத்திருந்தாலோ, கசப்பையோ வெறுப்பையோ காட்டியிருந்தாலோ அதற்காக உம்மிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மேலும் அவர்களிடமும் சமாதானமாயிருக்க எனக்கு உமது கிருபையை தருவீராக. அதுபோல எனக்கு தீங்கு இழைத்தவர்களை நானும் முழுமனதுடன் மன்னிக்கவும் எனக்கு பெலன்தாரும். என்மீது கசப்பு  வெறுப்பு கொண்டவர்களை நான் மன்னிக்கிறது போல அவர்களும் என்மீதுள்ள  கசப்பினை போக்க அவர்களது மனதினை மாற்றும் கர்த்தாவே ஆமென் ." என்று ஜெபிப்பேன். 

ஒருவேளை யார்மீதாகிலும் ஒருவர் கொண்ட மாற்றிக்கொள்ள முடியாத வெறுப்பினால் மன்னிக்கமுடியாத கோபத்தினால், அது ஒரு பாவமாக அல்லது தேவனுக்கு பிடிக்காத காரியமாக எண்ணப்பட்டு கோபங்கொண்டவரது ஆத்துமா நித்திய ஜீவனை அடையாமல் போகுமேயானால் நேரடியாக இல்லாவிட்டாலும் ஒருவிதத்தில் அந்த வெறுக்கப்படும் நபருங்கூட சேர்ந்தே அல்லவா அந்த பாவத்திற்கு காரணமாகிப் போகிறார், எனவே எனக்காகவும் என்மீது கோபம் கொண்டவர்களுக்காகவும்  மன்னிப்புக்கேட்டு ஜெபிப்பேன். 


ஆத்தும ஆதாயத்திற்கு:

"கர்த்தாவே நீர் பரத்துக்கேறி செல்லும்முன் 'நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்' என்று கட்டளையிட்டீரே, அதன்படியே இப்பொழுது நாங்கள் கிறிஸ்தவராக உம்மை தொழுதுகொள்ளச் செய்த உமது சிலாக்கியத்திற்காக நன்றி, அதுபோலவே விசுவாசிகளான நாங்களும் உமது ஊழியக்காராக மாறி எங்களது நாட்டில் வாழும் சகோதர சகோதரிகளையும் உலகமக்கள் அனைவரையும் உம்பக்கம் திருப்பி, நீர்தான் மெய்யான தெய்வம் என்பதை அவர்களுக்கு உணர்த்த எங்களுக்கு புத்தியையும் பலத்தையும் தெளிந்த ஞானத்தையும் தாரும், ஒரு ஆத்துமாக்கூட கெட்டழிந்து நித்திய ஜீவனை அடையாமல் போய்விடக்கூடாது என்பதில் நீர் எவ்வளவு கவனமாய் இருக்கிறீரோ, நாங்களும் அவ்வாறே இருக்க எங்களை மாற்றும். தாங்கள் வழிபடுவது இன்னதென்று அறியாமல்  வழிபடுகிற Roman Catholics எனப்படும் RC கிறிஸ்தவர்களையும் கூட Repented Christians என்கிற RC கிறிஸ்தவர்களாக மாற்றும் ஆமென் " என்று ஜெபிப்பேன்.

இன்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் முக்கியமாக கிராமப்புறங்களில், அடக்க ஆராதனைகளில் திருவிருந்து பரிமாறப்படுகிறது, இதுதான் நாம்  கர்த்தருக்குச் செய்யும் உகந்த தூயபலியா, கர்த்தர் இதனை ஏற்பாரா, மாட்டார்தானே. எனவே இத்தகையோர் மனமாற ஜெபிப்பது அவசியமே.


 எனது ஜெபங்கள்-2....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)