தலைப்பும் விளக்கமும்
"என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்", என்னடா இவ்வளவு பெரிய தலைப்பாக இருக்கிறதே, அதுவும் வேதாகம வசனமாக இருக்கின்றதே, இன்னும் உரலியும்(URL) கூட அவ்வசனம் வேதாகமத்தில் எங்குள்ளதோ அதன் முகவரியாக உள்ளதே. ஏன் இப்படியொரு தலைப்பு, என்ன காரணம் என்றெல்லாம் பலவாறாக யோசித்து இங்கு தெரிந்துகொள்ள வந்தவர்களுக்கு முதலில் கர்த்தரின் நாமத்தினால் ஸ்தோத்திரமும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.
ஆம், இதுவொரு வேதவசனம்தான் அதுவும் அப்போஸ்தலராகிய பவுல் கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதிய நிருபங்களில் ஆறாம் அதிகாரத்தில் உள்ள ஒரு வசனம்தான். மேலும் இவ்வசனமானது எப்பேற்பட்ட சூழ்நிலையில் அவரால் எழுதப்பட்டது என்றும் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். அவர் ரோமில் கைதியாக சிறையில் இருந்தபோது கூரான ஆணிகளாலான கைவிலங்குகள் இடப்பட்டவராய், தெரியாமல் சிறிது கை அசைந்தாலும் பிசகினாலும் கைகள் குத்தப்பட்டு சதைகள் கிழிக்கப்பட்டு ரத்தம் வருமளவிற்கு இருக்கும் சூழ்நிலையிலும் அவர் பல சபைகளுக்கு பிரயாசப்பட்டு எழுதிய நிருபங்களில் ஒன்றுதான் கலாத்தியரும் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் உண்மையில் அவர் இதனை சிறையில் இருக்கும்போது(கி.பி. 60-62) எழுதவில்லை அதற்கு முன்னதாகவே(கி.பி.50-55) எழுதியிருக்கிறார். அவர் அப்படி சிறையிலிருந்து எழுதிய நிருபங்கள், 'எபேசியர்', 'பிலிப்பியர்', 'கொலோசெயர்' & 'பிலேமோன்' இவைகளே. இங்கு நான் அதை இப்போது எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால், நான் ஏதோ தெரிந்தோ அல்லது தெரியாமலோ அப்படி ரத்தம் சிந்தி எழுதப்பட்ட வேதவசனத்தை தவறான வழியில் என் இஷ்டப்படி பயன்படுத்தி இருக்கிறேனோ என்று படிக்கின்ற உங்களுக்கு ஒருவேளை தோன்றியிருக்கலாம். அதாவது கர்த்தருடைய நாமத்தை நான் வீணிலே வழங்கிவிட்டேனோவென்று என்மீது உங்களுக்கு கோபமோ அல்லது கரிசனையோக்கூட வந்திருக்கலாம்.
அப்படியென்றால் அவர் சிறையிலிருந்து எழுதியிராத நிருபங்களின் வசனங்களை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நான் கூறவருவதாய் தவறாக நினைத்துக் கொள்ளாத உங்களுக்கு என் நன்றிகள், என்னைப்போலவே நீங்களும் நமது தேவனாகிய கர்த்தருடைய நாமமானது வீணிலே வழங்கப் படாதிருக்கவும் வெளியிலே தூஷிக்கப் படாதிருக்கவும் விரும்புகிறீர்கள். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், ஒருமுறை எனக்கு கர்த்தர் இவ்வசனத்தை வாக்குத்தத்தமாய் பேசி வெளிப்படுத்தினார், ஆகவே நான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.
அதாவது முன்னர் நான் சுமாராக ஏதோ கவிதை கதை கட்டுரை என்று எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்படியிருக்கும் போது கர்த்தருக்காக ஏதாவதொன்றை அல்ல அல்ல ஏற்றதை அவர் என்னைக்கொண்டு செய்ய நினைத்ததை செய்யவேண்டும் என்ற வேண்டுதலோடு வேதத்தை படிக்கும்போது எனக்கு வெளிப்பட்ட வசனம்தான் இது, பவுல் அப்போஸ்தலரைப் போலவே எனது எழுத்துக்களாலும் ஆத்துமாக்கள் தொடப்படும் என்பதாய் வாக்குத்தத்தமாக இவ்வசனம் வெளிப்பட்டது எனவே சற்றும் யோசிக்காமல் இவ்வலைப்பூவிற்கு அதனையே தலைப்பாக்கி விட்டேன். தவறாக இருந்தால் கர்த்தரிடமும் தவறாகப்பட்ட உங்களிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.!
தலைப்பும் விளக்கமும் அருமை
பதிலளிநீக்கு