தாலந்து
- மத்தேயு 25-ஆம் அதிகாரத்தில், 'அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது' என்று 14-ஆம் வசனத்தில் தொடங்கி, 'பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான், என்றார்' என்று 30-ஆம் வசனத்தில் முடிகிற, இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட உவமையைக் குறித்து சற்று வேறுவிதமாக ஆராயும் பதிவு இது.
- அந்த உவமையானது நாம் அனைவரும் அறிந்திருக்கிறவண்ணமாக, 'இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்' என்பதாய், நாம் நம்முடைய தேவன் நமக்கென்று தந்திருக்கிற தாலந்துக்களை அவருக்கென்று அவருடைய மகிமைக்கென்று பயன்படுத்தாமல் அதனை வீணாக்கி விட்டுவிடுவோமானால் நமக்கு என்ன விளைவுகள் நேரிடும் என்பதை விளக்கும் அல்லது நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையோடு கூடிய ஒரு விழிப்புணர்வு உவமையாகும். இதனையே வேறொரு கோணத்தில் சற்று சிந்தித்தபோது புலப்பட்ட காரியங்களை இங்கே பதிவாகப் பகிர்கிறேன்.
- தாலந்து என்பது நமக்கு தேவனால் கொடுக்கப்பட்ட திறமைகள் திறன்கள் ஆகும், மேலும் இங்கு தாலந்தினை காசுகளாகவும்கூட குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் இதனையே நான் இங்கு சற்று மாற்றி தாலந்துகளை மனிதர்களாக சித்தரித்து இந்த உவமையை தொடர்கிறேன். மனிதர்கள் என்றதும் காசுக்காக கொள்ளப்படும் அடிமைகள் என்கிற சிந்தனைக்குள் செல்லவேண்டாம், மாறாக விலையேறப்பெற்ற ஆத்துமாக்களாக நினைவில் கொள்ளுங்கள். ஆம் ஒவ்வொரு மனிதர்களுமே விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள்தான்.
- அந்த ஆத்துமாக்களை தமக்கென்று ஆதாயமாக்கிக்கொள்ளத்தான் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அவரவர் திறமைக்குத் தக்கதாக ஆத்துமாக்களை தந்துச் சென்றிருக்கிறார். அதில் திறமையுள்ள உண்மையுள்ள ஊழியக்காரர்கள் கர்த்தருக்கென்று அறுவடைசெய்கிறார்கள். இங்கு, 'ஊழியக்காரர்' என்பது ஊழியம் செய்கிறவர்களை மாத்திரம் குறிப்பிடுவதல்ல, நம்மைப்போன்ற கிறிஸ்துவை அறிந்த தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட சாதாரண மக்களாகிய நம்மையும்தான் குறிப்பிடுகிறது.
- முறையே 5 & 3 ஆத்துமாக்களைப் பெற்ற ஊழியக்காரர்கள் அந்த ஆத்துமாக்களைக் கொண்டு வேறே இன்னும் 5 & 3 ஆத்துமாக்களை அறுவடை செய்துகொண்டார்கள், ஆனால் ஒரேயொரு ஆத்துமாவை பெற்றவரோ ஆத்துமபாரம் சிறிதுமின்றி அந்த ஆத்துமாவை ஆதாயப்படுத்தாமல் தான் ஆயத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு தன்னுடைய ஆத்துமாவை அழித்துக்கொண்டார். ஆனால் அதில் பாருங்கள் அந்த ஒரு தாலந்தானது வேறொரு ஆளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுவிட்டது, அதாவது அந்த ஆத்துமாவானது எப்படியும் வேறொருவரால் ஆதாயமாக்கப்படும் அல்லது முயன்றும் ஏற்றுக்கொள்ள மறுத்து தன்னை அழித்துக்கொள்ளும்..
- இதை நாம், 'நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்', என்று மொர்தெகாய் எஸ்தரிடம் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. அதாவது கர்த்தரால் முன்குறிக்கப்பட்ட அல்லது தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆத்துமாக்கள்(புறஜாதியார்) எப்படியேனும் எவர் மூலமெனும் கர்த்தரால் கர்த்தருக்கென்று ஆதாயமாக்கப் படுகிறார்கள். ஒருவேளை அப்படியில்லாமல் அந்த ஆத்துமா நரகத்திற்கு சென்றால், அவர்களை நாம் முன்னமே வாய்ப்பிருந்தும் ஆதாயமாக்காமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு நாளிலே நாம் எப்படி குற்றமற்றவர்களாக நிற்போம்?
- அந்த ஒரு தாலந்து, நம்முடைய கணவனாகவோ மனைவியாகவோ பிள்ளையாகவோ தாயாக தகப்பனாகவோ அண்ணனாகவோ தம்பியாகவோ அக்காவாகவோ தங்கையாகவோ நெருங்கிய நண்பனாகவோ நண்பியாகவோ இன்னும் இரத்த சொந்தமாகவோ அண்டை அயலாராகவோ உடன் பணிபுரிவோராகவகூட இருக்கலாம். 'அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே' என்று அந்த எஜமான் கேட்டதைப்போல, கர்த்தரும் நம்மிடம் குறைந்தபட்சம் அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபித்திருக்கிறாயா அல்லது சொல்லியிருக்கிறாயா ஏதேனும் முயற்சிகளையாவது செய்திருந்திருக்கலாமே அப்போது அவர்கள் என்னைப்பற்றிய அறிவினையாவது அடைந்திருப்பார்களே என்பார்.
- 'என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்' என்று ஓசியாவிலே சொல்லப்பட்டதுபோல இல்லாமல் குறைந்தபட்சம் சொல்லவாவது செய்யலாம்தானே, அறிவிக்கவேண்டியது நம்மேல் விழுந்த கடமையல்லவா. கேட்பதும் கேளாதிருப்பதும் பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறுவதும் மாறாதிருப்பதும் அவர்களது விருப்பம். நாம் சொல்லாமலே அறிவிக்காமலே இருப்பது ஒருவகையில் பாவம்தானே, ஆகையால் இனி இந்த எழுப்புதல் காலத்திலேயே குறைந்தபட்சம் பிறரிடம் அறிவிப்போம், வருகைக்கு ஆயத்தமாவோம் நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துக்களை ஆயத்தப்படுத்துவோம், ஆக்கினைக்குத் தப்பிக்கொள்வோம்.
- குறிப்பு: தாலந்தை மனிதர்களோடு நான் ஒப்பிட்டதை இங்கு அர்த்தப்படுத்தி சொல்கிறேன். தால் + அந்து(அந்தம்), தால் என்பது நாக்கு, தமிழிலுள்ள ஒருவகை இலக்கியவகையில் 'பிள்ளைத்தமிழும்' ஒன்று. அதில் தாலப்பருவம் என்று ஒரு பருவமும் உண்டு, அதாவது நாவை அசைத்து ஒலியை எழுப்புதல் பேச தொடங்குதல், இதிலிருந்து வந்ததுதான் தாலாட்டு ஆகும். அந்தம் என்பது இறுதி அல்லது மரணம். இவைகளை வேத அடிப்படையில் தொடர்புப்படுத்தினால் குழந்தை பருவம் முதல் மரணம் வரை ஒருவரது வாழ்வினை குறிக்கிறது, மேலும் வாழ்நாள் முழுதும் நாம் கர்த்தரோடு ஐக்கியத்தில் இருக்கவேண்டும் அவரையே போற்றி புகழ்ந்து பிறருக்கும் அறிவிக்க வேண்டும் ஆதாயமாக்கவேண்டும் என்பது நன்கு தெளிவாகிறதல்லவா, நாமும் நம்முடைய வாயை(நாவை) திறப்போம். கடைசியாக, தா+லந்து எனப்பிரித்து லந்து கொடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக