நிராயுதமாய் - நீரே ஆயுதமாய்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நிராயுதபாணிகளான எங்களுக்கு நீரே ஆயுதமாய் வந்தீரே, உமக்கு கோடாக்கோடி நன்றிகள் என்று என்றைக்கேனும் நாம் அவருக்கு நன்றி சொல்லி அவரை மகிமைப் படுத்தியிருப்போமா?

"உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்" என்று, பல கஷ்டங்கள், நிந்தைகள் & அவமானங்கள் பட்டுவிடுவோமோ இப்படி புருஷனை அறியாமலே பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியாகி விட்டோமே என்றெல்லாம் யோசித்துக் கலங்கிப் பின்னர் கணவனான யோசேப்பும் அதனை அறிந்து புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு குடிமதிப்பு எழுதப்போகும் வழியில் சத்திரத்தில் தங்க இடமில்லாமல் பிரசவித்து மாட்டுத் தொழுவத்தில் குழந்தையை கிடத்தி, பின்னர் எட்டாம் நாளிலே தேவாலயத்திற்கு தூக்கிவந்த குழந்தை இயேசுவை குறித்து அவரது தாயாகிய மரியாளை நோக்கி சிமியோன் தீர்க்கதரிசி இப்படி சொல்கிறார்.  

அந்நேரத்தில் ஒரு தாயினது மனது எவ்வளவாய் கலங்கியிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்களேன், கர்த்தர் ஆபிரகாமுக்குக் கூட ஈசாக்கை சற்றே வளர்ந்த பின்னர்தான் பலியிட வேண்டுமென கேட்டார், ஆபிரகாமுங்கூட சிறிதளவேனும் அப்போது மனம் கலங்கித்தான் போயிருப்பார். ஆனாலும் அதனைவிடவும் மரியாளின் வேதனை இன்னும் அதிகமாய்த்தான் இருந்திருக்குமல்லவா, ஆயினும் அவர் அதனை ஏற்றுக்கொண்டு தன் மனதிலே வைத்துவைத்தார். சொன்னதுபோலவே பின்னர் நடந்தும் தீர்ந்தது.

கர்த்தரே, நிர்வாணிகளாயும் நிராயுதபாணிகளாயும் இருந்த நம்மேல் அன்புவைத்து தோல் உடை கொடுத்து ஆதரித்ததும் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை கொடுத்ததுமல்லாமல் அவரே இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானை வெல்லும் ஆயுதமாகவும் ஆனார். மேலும் நம்மையும் அவர் தந்த சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள்ளவும் சொல்லியிருக்கின்றார். "ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".

எனவே நாமும், நம்முடைய ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அதற்கும் துணிந்தவர்களாயும் இருக்க வேண்டும். மேலும் அதற்கு முன்னர் நம்முடைய ஆத்துமாவை ஜீவனும் வல்லமையுமுள்ள, இருபுறமும் கருக்குள்ள, எந்த பட்டயத்திலும் கருக்கானதான தேவனுடைய வார்த்தை என்கிற வசனத்தால் ஊடுருவிப்போக பண்ணவேண்டும். அப்போது கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார், நாம் சும்மாயிருப்போம்.

இயேசு கிறிஸ்துவும்கூட கடைசியாக சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கப்படப் போகும் முன்னர் தமது சீஷர்களிடம் ஆயுதமேந்த சொன்னாரல்லவா,"அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்" என்கிற வேதவாக்கியம் நிறைவேற, சீடர்களிடம் "இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்" என்றார். அதன் வெளிப்பாடாகவே மல்கூஸின் காது வெட்டப்பட்டது பின்னர் ஒட்டவும்பட்டது.

அதற்காக கிறிஸ்தவராகிய நாமும், உலகின் பல இடங்களில் கிறிஸ்தவராக இருப்பதின் நிமித்தம் பலர் துன்பப்படுத்தப்படுகிற இக்காலகட்டத்தில் இப்போது அதுபோல் செய்வது தகாது. ஏனெனில் "பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்". எனவே நாம் வசனம் என்னும் இருபுறமும் கருக்குள பட்டயத்தை நமக்குள் பாயச்செய்தும் அதே வசனம் என்னும் சர்வாயுதவர்கத்தை தரித்துக்கொண்டும் மட்டுமே தொடர்ந்து ஓடக்கடவோம்.

ஆமென்.!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)