தேர்ந்தெடுக்கப்படுதல் - தெரிந்தெடுக்கப்படுதல்
கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.!
நீங்களோ நானோ இப்பொழுது கிறிஸ்தவராய் இருப்பதற்கு காரணம் யாரென்றோ எதுவென்றோ கேட்டால் நாம் பலவற்றை கூறமுடியும், ஆனாலும் அதிலெல்லாவற்றிலும் முதன்மையானது ஒன்றே ஒன்றுதான் அது, கர்த்தரால் நாம் தேர்ந்தெடுக்கப் பட்டதாலோ அல்லது தெரிந்தெடுக்கப் பட்டதாலோ தான். எப்படியும் இவ்விரண்டில் ஒன்றுதான் பதிலாக இருக்கமுடியும்.
நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்று சொல்வோமேயாகில், நமக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதை நாமே நிதானித்து பார்ப்போம். அல்லது தெரிந்தெடுக்கப்பட்டோம் என்று சொல்வோமானால் நாம் என்ன வேதத்தில் சொல்லப்பட்ட தேவமனிதர்களை விடவும் அவ்வளவு நல்லவர்களா இல்லை பெரிய விசுவாச வீரர்களா இல்லை மிகவும் அதிகமாக தேவனோடு சஞ்சரித்தவர்களா, இதில் எதிலுமே நாம் நம்மை பொருத்திப்பார்க்கக்கூட தகுதி அற்றவர்கள் என்பதே உண்மை. ஆயினும் கர்த்தர் நம்மேல் வைத்த மாறாத அன்பினாலும் தூய தயவினாலும் அவரது ஒப்பற்ற அளவற்ற கிருபையினாலுமே அவரால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டும் தெரிந்தெடுக்கப்பட்டும் இருக்கிறோம்.
இங்கு நான் இரண்டையுமே குறிப்பிடுவதற்கு காரணம், கர்த்தர் நம் அனைவரையுமே தேர்ந்தெடுத்திருக்கிறார், அதிலும் அவருக்கென்று விசேஷமாக ஒருசிலரை தெரிந்தெடுத்தும் இருக்கிறார், உதாரணமாக சவுல் தாவீது போன்றோரை அரசராக, பன்னிருவரை சீஷராக, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இக்காலத்தில்கூட உதாரணமாக பலவருடமாக பலரும் யோசித்து தயங்கிய விஷயமான இஸ்ரேலின் தலைநகராக எருசலேமை மாற்ற, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டதைப் போல.
ஆற்றில் எத்தனையோ விதமான கல்லுகள் இருந்தாலும் தாவீது கோலியாத்தை வீழ்த்த வெறும் 5 கூழாங்கல்லுகளை மட்டுமே எடுத்தார், ஆனால் அதிலும் பயன்படுத்தப்பட்டது என்னமோ ஒரேயொரு கல்லுதான். மீதி 4 கல்லுகளை அவர் தனது கைப்பையில் போட்டுக்கொண்டார். அதுபோலவே இந்த உலகத்தில் எத்தனையோகோடி மனிதர்கள் இருந்தாலும் கர்த்தரால் அழைக்கப் பெற்றவர்கள் (தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்) ஒரு சிறு திரள்கூட்டமே, அதிலும் அவரால் முழுமையாக பயன்படுத்தப் படுகிறவர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) வெகுசிலரே.
அதனால் நாம் மீதியான அந்த 4 கல்லுகளைப் போல பயனற்றவர்கள் ஆகிவிடுவோமா, மேலும் அவர் நம்மை பயன்படுத்தாமல் தான் விட்டுவிடுவாரா, இல்லை என்பதே உண்மை. நாம் இப்போது தாவீதின் பையிலிருக்கும் கல்லுகளைப்போல கர்த்தரின் செட்டைக்குள் பத்திரமாக இருக்கிறோம், தக்க சமயத்தில் அவர் நம்மை பயன்படுத்தி நம்மூலம் அவர் மகிமையடைவார். எனவே நாம் அதுவரை அவரது பலத்த கைக்குள் அடங்கியிருத்தலே சிறந்தது. மேலும் நாமும் அவரால் வல்லமையாக பயன்படுத்தப்பட வேண்டுமானால் அவரோடு போராடி ஜெபிக்கலாம் அல்லது அவரது சித்தத்திற்கு நம்மை முழுமையாக ஒப்புகொடுத்துவிடலாம்.
எனவே இறுதியாக, கர்த்தர் நமக்கென்று குறித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம், கர்த்தருக்காய் எழும்பி பிரகாசிக்கிற மற்றவர்களைப் பார்த்து பொறாமையோ வன்கண்ணோ கொள்ளாமல்,' ஸ்திரீயே இன்னும் என் வேளை வரவில்லை' என்று இயேசு கிறிஸ்து கூறியதைப்போலவும், ஆபிரகாம் 25 வருடம் பொறுமையோடே காத்திருந்தது போலவும் நாமும் நமக்கான வேளைக்காக காத்திருப்போம், ஏற்ற சமயத்தில் நாமும் அவரை மகிமைப்படுத்துவோம்.
ஆமென்.!
கருத்துகள்
கருத்துரையிடுக