இரண்டு சகோதரர்கள்

வேதத்தில் நாம் பல இரு சகோதரர்களைப் பார்த்திருப்போம், அதிலும் இரட்டை சகோதரர்களாயும்கூட படித்துமிருப்போம். இப்பதிவில் அப்படிப்பட்ட இரண்டு இரு சகோதரர்களை அலசி ஆராய்வோம் ஒரு இருவரை பழைய ஏற்பாட்டிலும் மற்றொரு இருவரை புதிய ஏற்பாட்டிலுமிருந்தும் தொடர்புபடுத்தி காண்போம்.

முதலில் புதிய ஏற்பாடு, இந்த சகோதரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உவமையாக சொல்லப்பட்ட, காலங்காலமாக நம்மால் 'கெட்டகுமாரன்... கெட்டகுமாரன்...' என்று சொல்லப்பட்டு வரும் மனம்திருந்திய குமாரனின் கதையில் வரும் இரு சகோதரர்கள். இக்கதையின் சாராம்சம் நாம் அனைவரும் அறிந்ததே, நான் இங்கு குறிப்பிட விரும்புவது மனம்மாறிய இளையகுமாரனை பற்றி அல்ல அவனது அண்ணனான மூத்தகுமாரனைப் பற்றி.



எனக்கும் முதலில் மூத்தகுமாரன் தன் தந்தையின்மீது  கோவம் கொண்டது சரியென்றுதான் பட்டது. ஏனெனில் நானும் ஒரு அண்ணன் என்பதாலும், எனக்கும்கூட ஒரு தம்பி இருப்பதாலும். மூத்தவன் தன் தகப்பன் தனக்கு எதுவுமே செய்யவில்லை ஆனால் ஆஸ்தியை அழித்துப்போட்ட தனது தம்பி திரும்பி வந்ததுமே அவனுக்கு விருந்து செய்வித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் கோபம்கொண்டு தகப்பனிடம் வாக்குவாதம் செய்தான். பின்னர்தான் நானும் தெளிவாக அறிந்து புரிந்துகொண்டேன்.

அதற்கு அந்த தகப்பன் சொன்னது, "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளது எல்லாம் உன்னுடையதாய் இருக்கிறது, அவனோ காணாமற்போனான் மறுபடியும் காணப்பட்டான், அதனால் நாம் சந்தோசப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்" என்றார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, 'எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது' எனும் இவ்விரு வார்த்தைகளை. அதாவது அந்த தகப்பனின் மனவாஞ்சையானது, தான் தன் இளைய மகனுக்கு செய்வித்த காரியத்தை அந்த விருந்தை  தனது மூத்தமகனே அவனுக்கு செய்வித்திருக்க வேண்டும் என்பதாய் இருக்கிறது, அதாவது அவனது பங்கும் அதில் இருந்திருக்க வேண்டும் என்பதாய்.

அதாவது நீ செய்திருக்க வேண்டிய இடத்தில் நீ இல்லாத காரணத்தால் நானே அதை பொறுப்பெடுத்து செய்தேன் என்பதாய் அவர் அவனிடம் கூறியிருப்பதாயும், மேலும் அவனை இதற்காக வேறுயார் மன்னிப்பார்கள் நாம்தான் மன்னிக்க வேண்டும், மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அதுதான் தேவனுக்கு பிரியமான நடத்தை, இன்னும் என்னுடையது எல்லாமே உன்னுடையதுதான், எனவே நான் நடத்தும் இந்த விருந்திற்கு உனது முழுசம்மதமும் வேண்டும் என்கிற அர்த்தத்தில் அவர் கூறியிருப்பார் என்பதாயும் சற்றே யோசித்துப்பாருங்கள். அப்பொழுது அந்த அண்ணனின் கோபம் அர்த்தமற்றதாகி விடுமல்லவா?

அந்த தகப்பன் தமது இரு மகன்களையும் ஒன்றுபோலவேதான் நேசித்திருக்கிறார், இளையவன் போனபிறகு அவன்மீது நினைவாய் இருந்தாலும்கூட மூத்தவனையும் அவர் வெறுத்துவிடவில்லை இவன் மீதான நேசமும் குறைவுபடவில்லை. அப்படி இருக்கையில் ஒருநாள் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்போது, அவன் வரும்போது இவன் ஓடிப்போய் "அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்தான்" என்று போடப்பட்டுள்ளது. இங்கு தந்தையின் அன்பும் மன்னிப்பும் விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.



இதே வார்த்தைகளானது அப்படியே மாற்றப்படாமல் பழைய ஏற்பாட்டிலும் இரு சகோதரர்களை குறித்து ஒருமுறை சொல்லப்பட்டிருக்கிறது எங்கேயென்றால், ஆதியாகம புஸ்தகத்தில். யாக்கோபு தன் அண்ணாகிய ஏசாவை காண பயத்துடன் திரும்பி வரும்போது, ஏசா எதிர்கொண்டு ஓடிப்போய் "அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்தான்" என்று போடப்பட்டுள்ளது. ஏசாவும் தன் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னித்து யாக்கோபினை ஏற்றுக்கொண்டார். ஏசாவை குறித்து நமக்கு பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்கூட இந்தவிஷயத்தில் ஏசா செய்ததைத் தான் அந்த தகப்பனும் செய்தார் இன்னும் தனது மூத்த மகனும் அப்படியே இருக்கவும் விரும்பினார். 

இன்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை அந்த தகப்பனை போலவும் மன்னிப்பதில் ஏசாவைப்போலவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஆனால் நாம் அப்படித்தான் இருக்கின்றோமா என்று நிதானித்து அறியக்கடவோம். எனவே, நாமும் நமது  சகோதர சகோதரிகளை உற்றார் உறவினர்களை மற்றும் சுற்றத்தாரை எவ்விதத்திலாகிலும் நமக்கு தீங்கிழைத்தவராயினும் மன்னித்து அன்போடு உபசரித்து கர்த்தருடைய அன்பை வெளிக்காட்டுவோம் அவரை மகிமைப்படுத்துவோம். அப்போது அந்த தகப்பன் சொன்னதுபோல, பரலோகிலும் பூலோகிலும் கிறிஸ்து இயேசுவுக்குரியது (எல்லாமே) நமக்கும் உரியதாய் இருக்கும்.

ஆமென்.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)