காணிக்கையும் - தணிக்கையும்
நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
- மத்தேயு 5 : 23 & 24
இவ்வசனத்தை பெரும்பாலும் நாம் அனைவருமே ஒருவிதத்தில் & ஒரேவிதத்தில் புரிந்திருப்போம், எனவே இப்பதிவின் வாயிலாக நான் அதை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன், படிக்கின்ற நீங்களும் இதன் முடிவில் உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
முதலில் நாம் நினைத்திருக்கும் விதத்தை தெளிவுபடுத்தி விடுவோம், நாம் நமது காணிக்கைகளை செலுத்தப் போகும்முன்னர், நமதுபேரில் நமது சகோதரர்களுக்கோ அல்லது பிறருக்கோ நம்மைக்குறித்து ஏதேனும் குறைகளோ மனஸ்தாபமோ இருக்கும் பட்சத்தில் முதலில் அவரிடம் சென்று ஒருவருக்கொருவர் மன்னிப்புக்கேட்டு ஒப்புரவாகிவிட்டு பின்னர் நமது காணிக்கைகளை செலுத்தவேண்டும் அப்போதுதான் நமது காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்வதாய்த்தான் நாம் அர்த்தம் கொண்டிருப்போம். இன்னும் நாம் மற்றவர்களது பேரில் குற்றமோ குறையோ வைத்துக்கொண்டு அவர்களாக முன்வந்தாலோ அல்லது நாமாகவோ சென்று அவர்களை மன்னித்து அவர்களிடம் ஐக்கியமானால் நமது காணிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும்கூட நினைத்திருப்போம்.
வேறொரு கண்ணோட்டத்தில் ஒருசில எடுத்துக்காட்டுகளோடு இதனை ஆராய்ந்து பார்ப்போம், அதற்காக ஏன் அவ்வசனத்தை வேறொரு வசனத்தோடு ஒப்பிட்டு நாம் அணுகி பார்க்கக்கூடாது. அதாவது, "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்கிற இந்த வசனத்தை வைத்து ஆராயலாம்தானே, எப்படி என்று பார்ப்போம். இவ்வசனத்தின் விளக்கம் நேரிடையாக ஒன்றே ஒன்றுதான். அது நாம் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கின்றோமோ பாதுகாத்துக் கொள்கின்றோமோ அதே அளவிற்கு பிறரையும் நேசிக்கவேண்டும் அவர் நமக்கு தீங்கிழைத்தவரானாலும் கூட அவரையும் மன்னித்து நேசிக்க வேண்டும், அதுதான் இதன் முழு அர்த்தம். இவ்வசனம் அவ்வசனத்தில் எவ்வாறு உள்ளார்ந்து செயல்படுகிறது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
ஆபிரகாம் லோத்துவை எடுத்துக்கொள்ளலாம் இருவரும் உறவினர்கள் இருவரும் ஒன்றாத்தான் தங்கள் சொந்த தேசத்தைவிட்டு வந்தார்கள். ஆயினும் இருவரது மந்தைமேய்ப்பருக்கும் ஒருகட்டத்தில் வாக்குவாதம் உண்டானபோது இருவரும் தனித்தனியாக பிரிந்து போகலாம் என்று முடிவெடுத்து எதிரெதிர் திசையில் குடிபோய்விட்டனர். பின்னர் ஒருமுறை லோத்து வாழ்ந்த நாட்டின்மீது ஒரு நான்கு ராஜாக்கள் ஒன்றுசேர்ந்து படையெடுத்து வந்தனர், அந்நாட்டு ராஜாவும் வேறே ஒரு நான்கு ராஜாக்களோடு ஒன்றுசேர்ந்து அவர்களை எதிர்த்து போரிட்டும் தோல்வியை தழுவியதால் அந்நாட்டின் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு மக்களும் அடிமைகளாக கொண்டுபோகப்பட்டனர். அப்படி அவர்களில் லோத்தும் அவரது உடைமைகளும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கொண்டுபோகப்பட்டனர்.
இச்செய்தியை ஆபிரகாம் கேள்விப்பட்டு தன்னுடைய வேலைக்காரர்களில் சிலருடன் ஆயுதங்களுடன் சென்று லோத்துவையும் அவருக்குண்டான எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். இவ்வாறு அவர் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, உறவே வேண்டாமே விட்டுப்போன லோத்துவுக்காக குறைந்தபட்ச வருத்தங்கூட பட்டிருக்க வேண்டியதில்லைதான், ஆயினும் தன்னைப்போல பிறனையும் நேசித்தமையாலும் தம்பேரில் தன் சகோதரனுக்கு யாதொரு குறையும் உண்டாகக் கூடாதென யோசித்தமையாலும் அவரே நேரடியாக சென்று மீட்டுவந்தார். அதாவது ஆபிரகாம் இருந்தும் லோத்துவை இப்படி அநியாயமாக அடிமையாக கொண்டுபோகும் படியாக விட்டுவிட்டாரே என யாரும் சொல்லிவிடாதபடி, அப்படியே சொன்னாலும் அது நியாயமில்லாத குற்றசாட்டாகதான் முடியும் என்பதை அறிந்திருந்தும் லோத்துவை பத்திரமாக காப்பாற்றி வந்தார்.
லோத்தும்கூட ஆபிரகாம் தன்னை காப்பாற்ற வருவார் என்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அப்படியே அவர் வராமல்கூட இருந்திருந்தாலும் இவரும் அவர்பேரில் குறையொன்றும் சொல்லியிருக்கவும் மாட்டார், இது தானாக தாமே தேடிக்கொண்டதன் விளைவின் பலனாகத்தான் நடந்திருக்கிறது என்று இவரையே இவர் நொந்துகொண்டிருப்பார். ஆனாலும் ஆபிரகாம் வந்தது அவர் தேவனோடு கொண்ட அன்பினாலும் அவருடைய கட்டளைகளை கைக்கொண்டபடியினாலுமே என்பதை லோத்தும் பின்னர் உணர்ந்திருப்பார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி அவருக்கு ஒரு மகனை தருவேன் என்றும் அவர்மூலம் அவருடைய சந்ததி ஆசிர்வதிக்கப்படும் என்று வாக்களித்தார்.
மற்றொருமுறை, கர்த்தர் சோதோம் கொமோரா பட்டணத்தை அழிக்கப்போவதை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்திய போதும் ஆபிரகாம் லோத்து மற்றும் அவரது குடும்பத்துக்காக கர்த்தரிடம் குறைந்தபட்சம் 50, 45, 40, 30, 20 இப்படி கடைசியாக 10 நீதிமான்கள் அப்பட்டணத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை அழிப்பீரோ என்று கெஞ்சி மன்றாடினார், கர்த்தரும் பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். ஆனாலும் அங்கே லோத்தின் குடும்பத்தாரை தவிர வேறேயாரும் நீதிமான்களாக இல்லை என்பதை கர்த்தர் அறிவார். எனவே தேவன் அதை அழிக்கும்போது, ஆபிரகாமை நினைத்து லோத்தை அந்த அழிவிற்கு முன் தமது தூதர்களை அனுப்பி அவர்களை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி விட்டார். இதற்கு பின்னர் கர்த்தர் தாம் வாக்கு பண்ணினபடி ஆபிரகாமுக்கு ஈசாக்கை தந்தார்.
இவ்விரு சம்பவங்களிலும் இருவருக்கும் நேரடி தொடர்பில்லை ஆனாலும் ஆபிரகாம் தன்னைப்போல பிறனையும் நேசித்த அன்பினாலும், மேலும் தன் சகோதரனுக்கு தன்பேரில் குறையொன்றும் வந்துவிடாதவாறு அவருக்காக வேண்டுதலினாலும் செய்கையினாலும் அவரோடு ஒப்புரவானார், அதனாலேயே ஆபிரகாம் படைத்த சகல பலிகளையும் காணிக்கைகளையும் கர்த்தர் ஏற்றுக்கொண்டார் அங்கீகரித்தார், மேலும் தன்னையே கர்த்தரிடம் உகந்த காணிக்கையாக அவர் ஒப்புக்கொடுத்திருந்தார் இன்னும் ஈசாக்கையே பலியாக கேட்டபோதும்கூட அதற்கும் துணிந்தவராய் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் கட்டிவைத்து கத்தியை எடுத்து ஓங்கி வெட்டும்வரை போய்விட்டார். அதனாலேயே விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டார்.
வேறொரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டிலிருந்து பார்க்கலாம், பேதுரு 3 முறை கர்த்தரை மறுதலித்து பின்னர் கர்த்தரிடம் மனங்கசந்து மன்னிப்பு கேட்டபின், இயேசு உயிரோடு எழுந்திருந்த பின்னொருநாளில் பேதுருவிடம் 3 முறை என்னை நேசிக்கிறாயா என்று கேட்டு பேதுருவின் நேசத்தை உறுதிபடுத்தி அவரை மன்னித்து என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். இதிலிருந்து இயேசுவும் தம் பேரில் தன் சகோதரனுக்கு யாதொரு குறையும் களங்கமும் யார்மூலமாக வந்துவிட கூடாது என்று கவனத்தோடும் தன்னை போல பிறனையும் அவர் நேசித்த காரணத்தாலும் அவர் பிதாவினண்டைக்கு ஏறிச்செல்லும் முன்னர் இப்படி செய்தார். அதாவது அவரே தன்னை காணிக்கையாக படைத்ததால் பரலோகத்தில் பிதாவால் ஏற்றுக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளவும் பட்டார்.
இப்பதிவை படிக்கின்ற உங்களுக்கும் எனக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம், இல்லாமலும் கூட இருக்கலாம் ஆனாலும் இயேசு எப்படி பரிதபித்திருப்பாரோ அதேபோல நானும் உங்களுக்காக பரிதபித்து நீங்களும் இரட்சிக்கப்படவும் பரலோகில் சேர்க்கப்படவும் இந்த எழுப்புதல் காலகட்டத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால் நானும், என்னை நான் நேசிப்பதுபோல உங்களையும் நேசிக்கிறேன், இப்பதிவை படிகின்ற ஒரு ஆத்துமாகூட கெட்டழிந்து நித்திய ஜீவனை அடையாமல் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன் மேலும் என் பேரில் தங்களுக்கு குறையொன்றும் வந்துவிடாதவாறு தங்களோடு இப்பதிவின் வாயிலாக ஒப்புரவாக ஆசைப்படுகிறேன். ஆகவே என்னிலோ இப்பதிவிலோ அல்லது கருத்திலோ குறை இருந்தால் சொல்லுங்கள், நிவர்த்திசெய்து ஒப்புரவாகி விடலாம்.
முடிவாக, காணிக்கையாக கர்த்தருக்கு ஒன்றை படைப்பதை விடவும் நமக்கு எவ்வித சம்பந்தமே இல்லாதவர்களுக்காகவும்கூட நாம் நல்மனம் பொருந்தும்படி அவர்களோடு ஏதேனும் ஒருவிதத்தில் ஒப்புரவாகி வாழ்ந்து காட்டுவதுதான் கர்த்தருக்கேற்ற உகந்த காணிக்கையாகும், அதுவே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பதிவையும் அப்படிப்பட்ட ஒரு காணிக்கையாகத்தான் உங்கள் அனைவருக்காகவும் நாம் அனைவருமே அதனை உணரவேண்டி நான் பதிவிடுகிறேன், இப்படி ஒரு பதிவை போடாமலும் இருந்திருக்கலாம் தான், ஆனாலும் கர்த்தரின் அன்பை வெளிக்காட்ட & பிறருக்கும் சொல்ல வேண்டுமல்லவா அதற்குத்தான், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.!



கருத்துகள்
கருத்துரையிடுக