மனைவிக்கோர் மடல்

முன்குறிப்பு: இப்பதிவை கர்த்தர் ஒருவேளை எனக்கென்று ஒரு பெண்ணை எனது விலா எலும்பாக ஏற்கனவே முன்குறித்து வைத்திருந்தாரானால் அப்படிப்பட்ட என்னுடைய துணையானவளுக்கு, நான் எழுதக்கூடிய ஒரு மனந்திறந்த மடலாக பதிவிடுகிறேன். மேலும், இனி திருமணம் ஆகப் போகிறவர்களுக்கும் இப்போது புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டி இப்பதிவை  அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அன்புள்ள என் விலாவிற்கு,
என்னால் நேசிக்கப்படப்போகும் பெண்மானும், அழகான வரையாடும் போலிருக்கப்போகும் என் இளவயதின் மனைவிக்கு, கர்த்தரின் நாமத்தினாலே ஸ்தோத்திரம். சற்றே சந்தேகமாய் தோன்றலாம் இளவயதின் மனைவி என்றால், அப்போது முதிர்வயதில் நான் மனைவியாயிருக்க மாட்டேனா என்று. அப்போது நீ எனக்கு நல்ல தோழியாகவோ அல்லது எனக்கு இரண்டாவது தாயாகவோ அல்லது குடும்பத்தார் அனைவருக்குமான தேவதையாகக் கூட இருக்கலாம். 'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' என்கிற வசனத்தின்படி நாம் தொடங்கப்போகும் வாழ்வுக்காக கிறிஸ்துவுக்கு கோடி நன்றிகள்.  'முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது' என்கிற வசனத்தின்படி நாம் அப்படியான கர்த்தரோடு பின்னிப்பிணைந்த ஒரு வாழ்வை கர்த்தருக்குள் வாழவேண்டும், வாழவும் போகிறோம்.

முதலில் இங்கு அந்த முப்புரிநூலைப் பற்றி  நமக்குத் தெரிந்தவரை பார்த்துவிடுவோம். முப்புரிநூல் என்பது பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது, நமதுநாட்டில்கூட இன்றும் ஒருசிறு கூட்டத்தவரால் அது புனிதமாக எண்ணப்பட்டு அவர்களாலேயே அவர்களுக்கு அணிவிக்கப்பட்டு அவர்களாகவே தங்களை அதன்மூலம் உயர்ந்தவராக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 

அவர்களது கோட்பாடுப்படி அந்த முப்புரிகளானது 'மனம், வாக்கு & செய்கை' ஆகிய மூன்றும்தான் எனவே அவைகளை சுத்தமாக எப்போதும் காத்துக்கொள்ளவேண்டி அதனை ஒரு நினைப்பூட்டுதலுக்காக அணிந்திருக்கின்றனர். நமது கிறிஸ்தவ திருமணங்களிலும்கூட முப்புரிநூலுக்கு விளக்கமாக, கணவன், மனைவி & கர்த்தர் ஆகிய மூவரும் சேர்ந்து ஒன்றாக இருப்பதுதான் என்பதான விளக்கமெல்லாம் பிரசாங்கமாகக்கூட நாம் பலமுறை கேட்டிருப்போம்.

ஆனால், நமது வேதாகமத்தில் 7 இடங்களில் கணவனும் மனைவியும் 'இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருப்பார்கள்' என்று கூறப்பட்டுள்ளது அப்போது முப்புரிநூல் பற்றிய நாம் கொண்டுள்ள புரிதல் தவறாகிப்போகிறது, எனவே நம்மையும் கர்த்தரையும் தவிர்த்து மீதியுள்ள அந்த ஒரு நூலானது என்ன அல்லது யார் என்பதையும் இன்னும் இதுபோன்ற பல வேத ரகசியங்களையும் நாம் சேர்ந்தே அறிய முற்படலாம், மேலும் நமக்குள் யார் கர்த்தரண்டை இன்னும் அதிகமாய் நெருங்கி வாழ்கிறார்கள் சேருகிறார்கள் என்கிற பொறாமையற்ற ஆரோக்கியமான போட்டிபோடலாம். பிரயாசத்தால் பரியாசம் வந்தாலும், வசனங்களால் விசனங்கள் நேர்ந்தாலும் தொடர்ந்து சொல்லுவோம் கர்த்தரின் அன்பை.

நாம் செய்கிற செய்யப்போகிற எல்லாவற்றிலும் தேவசித்தம் அறிந்து செயல்படலாம். I கொரிந்தியர் 7-ன்படி, எப்படி நீ என் சுயசரீரத்திற்கு அதிகாரியாக இருப்பாயோ, நானும் உனக்கு அப்படிதான் இருக்கப்போகிறேன் என்பதையும் மறந்துவிடாதே, இதனை நான் மிரட்டும் தொனியில் கூறியிருக்கமாட்டேன் என்பதை நீ உணரத்தொடங்கும் அந்நொடியில் தொடங்குகிறது நமக்கான புரிதல்.  அதுபோலவே எனக்கு செய்யவேண்டிய கடமைகளை எப்படி நீ மறக்காமல் செய்வாயோ, நானும் உனக்கு செய்யவேண்டிய கடமைகளை மறக்காமல் செய்வேன் ஏனென்றால் நம்மிருவருக்குள்ளும் இருப்பவர் ஒரே பரிசுத்த ஆவியானவர்தான்.

நமக்கிந்த ஈவு கர்த்தரால் அருளப்படும், அவ்வாறே அருளப்பட்டாலும், 'உன்னைப்போல பிறனையும் நேசி' என்கிற வசனத்தின்படி குறைந்தபட்சம் ஒரு குழந்தையையேனும் தத்தெடுத்து வளர்க்கலாம், அப்படியாகிலும் வேறு ஒரு ஆத்துமாவை நாம் கர்த்தருக்குள் வழிநடத்தி இருக்கிறோம் என்கிற மனதிருப்தியோடு வளர்க்கலாம், கர்த்தரும் இதில் பிரியப்படுவார். மேலும் நமக்கிடையே ஏதேனும் மனஸ்தாபம் வரும்போதெல்லாம் எப்பொழுதும் வேதத்திற்கு அடுத்து ஒருவேளை இம்மடலே நமக்கான சமாதான பாலமாக இருக்கலாம், இருக்கும் என்றும் நம்புகிறேன். படித்தவுடன் சமாதானம் ஆகிவிடுவோமாக, ஆமென்.

வேதாகமத்தில் பல தம்பதியினர் நமக்கு உதாரணமாக இருந்தாலும், எனக்கு பிடித்தவர்களாக யோபுவும் அவரது மனைவியும் தான் சட்டென தோன்றுவர். அதுயேனென சொல்கிறேன், அவரது மனைவி அவரிடம் நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும் என்று சொல்லியும், யோபுவும் அவரது மனைவியிடம் நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோல பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்று சொல்லி மனைவிக்கு பொறுமையாய் புரியவைத்தார் அவர் மனைவியும் புரிந்துகொண்டார். யோபுவும் இதற்காக அவர், அவரது மனைவியை கோபித்துக் கொண்டு துரத்திவிடவும் இல்லை விலக்கிவைக்கவும் இல்லை, அவர் மனைவியும் இவரைவிட்டு போகவும் இல்லை அப்படி நாமும் படிக்கவில்லை.

வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் சுகவீனத்திலும் கூட இருப்பேன் என்று திருமணத்தின்போது இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கூடவேதான் இருந்தார். அதனால்தான் யோபுவின் பின்னிலைமை அதிக ஆசீர்வாதமாக இருந்தது, மேலும் இழந்த 10 பிள்ளைகளுக்கு பதிலாக 10 பிள்ளைகளை கர்த்தர் தந்தார். இங்கு நான் குறிப்பிட விரும்புவது, வேதாகமத்தில் அதிக பிள்ளைகள்(20 பிள்ளைகள்) ஒரே மனைவிக்கு ஒரே கணவனால் பிறந்ததாக இதில்தான் பார்க்கிறோம். யோபு வேறொரு பெண்ணை திருமணம் பண்ணியிருந்தார் என்பதாயோ அல்லது அவருக்கு மறுமனையாட்டிகள் இருந்தாயோ நாம் படிக்கவில்லை, அப்படியானால் அவர் ஒரே மனைவியை உடையவராய்த்தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறதல்லவா. நாமும் அப்படிதான் இருப்போம் இருக்கவும் போகிறோம்.

முடிவாக இம்மடலானது நீ, யாரென்று எனக்கு தெரியாதபோதே எழுதப்படுகிறது. மேலும் நான் மேற்சொன்னவைகளை எல்லாம் நீ முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்வாயோ, இல்லை மறுப்போ அல்லது மாறுதலோ சொல்லுவாயோ என்று நான் எதையும் யோசிக்கவும் இல்லை, யோசிக்கவும் மாட்டேன். எனக்குத் தெரியும், நீ என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமானவள். அப்படியே நாமிருவரும் ஒரே மாம்சமாய் இருப்பதால் இருவரும் ஒரே சிந்தையுள்ளவர்களாயும் இருக்கிறோம், எனவே இப்பதிவில் உனது கருத்துக்களும் யோசனைகளும்கூட இருக்கிறது. கர்த்தருடைய கிருபை எப்போதும் நம்மோடிருப்பதாக.

ஆமென்.! 

இப்படிக்கு அன்புள்ள,
__________________________

பின்குறிப்பு: இன்னும் எனது திருமணத்திற்கு வரன் பார்க்கவே ஆரம்பித்திராத இன்னும் அந்த யோசனையே உதித்திராத இந்த காலகட்டத்திலேயே, வரப்போகும் துணைவிக்கு இப்படியொரு மடல் எழுத என்ன அவசியம், அல்லது இதன்வாயிலாக நான் பிறரிடம் எனக்கு சீக்கிரமே வரன் பாருங்கள் என்பதாய் மறைமுகமாக கூறுவதாக நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை. இப்போதே பொண்டாட்டிதாசன் ஆகிவிட்டானே என்று  நினைத்தாலும் அதுவொன்றும் என்னை பாதிக்கப்போவது இல்லை. இதனை படிக்கின்ற நீங்கள், உங்கள் நினைவுகளாலேயே பாவத்திற்கு ஆட்பட்டு விடாதீர்கள்.  

இயேசு தோமாவிடம், "நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" என்று சொன்னதுபோலும், யோவான், "தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" என்று கேட்டதுபோலும் நானும், இதுவரை கண்டிராத என் தேவனிடத்தில் எப்படி அன்புகூருகிறேனோ அப்படியே அதனினும் சற்றுக்குறைவாக எனக்கு மனைவியாக வரப்போகிறவளிடத்திலும் இப்போதிலிருந்தே அன்புகூருவேன் என்பதை வெளிப்படுத்திக் காட்டும் ஒரு அறிக்கையாகத் தான் இப்பதிவை பதிவிட்டுள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுதலிப்பும்-மன்னிப்பும்-மறுவாழ்வும்

அற்பமும் அற்புதமும்

உலக இரத்ததான தினம் (ஜூன் 14)